தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சென்னை, ஆவடி, சேலம், திருப்பூர், மதுரை, கோவை என மாநகர பகுதிகளில் மற்றும் தமிழகம் முழுவதும் பேரணி மற்றும் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டு இருந்த நிலையில், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்துள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக அனுமதி தர இயலாது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நவம்பர் 6ம் தேதியில் பேரணி நடத்திக்கொள்ள ஆர்.எஸ்.எஸ்க்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
PFI இந்தியாவில் தடை செய்ததைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணியைப் பல அரசியல் தலைவர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கேரள காங்கிரஸ் எம்.பி கொடிகுன்னில் சுரேஷ், ” பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவைத் தடை செய்வது தீர்வாகாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான் நாடு முழுவதும் மதவாதத்தைப் பரப்பி வருகிறது. இரண்டு அமைப்புகளுமே ஒன்றுதான் என்பதால், இரண்டையுமே தடை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
1925 ஆம் ஆண்டு விரக்தியடைந்த காங்கிரஸ்காரர் ஹெட்கேவாரால் உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் 1948, 1975 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை தடைகளை எதிர்கொண்டது.
1948 தடை : ஆர்.எஸ். எஸ் அமைப்பின் முதல் தடை மகாத்மா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 1948 ஆம் ஆண்டில் தான் விதிக்கப்பட்டது. இந்த தடைக்கான காரணமாக சர்தார் வல்லபாய் படேல் தலைமையிலிருந்த உள்துறை அமைச்சகம், ‘’ நாட்டின் பல பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கொலை, கொள்ளை, சட்டவிரோத செயல்கள், தீ வைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். நாடு இப்போது பெற்றியிருக்கும் சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் இந்த அமைப்பு தடை செய்யப்படுவதாக’’ கூறியது. இதன் பின்னர் 18 மாதங்களுக்குப் பிறகு காலத்துக்குப் பின்னர் இந்த தடை சர்தார் வல்லபாய் படேலே விலக்கினார்.
1975 தடை : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை பிரகடனத்தின்போது ஆர்.எஸ்.எஸ் மீதான இரண்டாவது தடை விதிக்கப்பட்டது.
1992 தடை : அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மீதான மூன்றாவது தடை விதிக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த பி.வி நரசிம்மராவ் மற்றும் உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவாண் ஆகியோர் இந்த தடையை விதித்தார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை பதற்றமான சூழல் தொடர்ந்ததால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் மற்றும் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) ஆகிய இயக்கங்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் சேர்த்து தடை செய்யப்பட்டன. இதன்பின்பு, தீர்ப்பாயத்தில் தடைக்கான காரணங்களை மத்திய அரசு தரப்பிலிருந்து சரிவரக் கொடுக்காததால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM