சென்னை: ஆறுமுகசாமி விசாரணை தொடர்பாக எனக்கு 3 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான், நான் எனது வாக்குமூலத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தேன்” என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
சென்னையில் வி.கே.சசிகலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் சசிகலா உட்பட 3 பேரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” இந்த விசாரணை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அதனால் இதுகுறித்து நான் சொல்கிறேன்.
இந்த விசாரணை தொடர்பாக எனக்கு பெங்களூரு சிறைச்சாலைக்கு கடிதம் வந்தது. அதில் எனக்கு மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது. நேரடியகா வரலாம், அல்லது வழக்கறிஞர் மூலம் விசாரணைக்கு ஆஜராகலாம், எழுத்துபூர்வமாக எனது பதிலை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நான் எனது வாக்குமூலத்தை எழுத்துபூர்வமாக பதிலை தாக்கல் செய்தேன்” என்றார்.
மேலும், என்னைப் பொருத்தவரை அதிமுகவில், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 2024 தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ஏன் அவசரப்படுகிறீர்கள். ஓபிஎஸ் எப்போது என்னை சந்திக்கப்போகிறார் என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.