1) கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் பயன்பாடுகளில் வரும் மாறுதல்கள்
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்பாடுகளில் முக்கிய மூன்று மாற்றங்களை மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்திருக்கிறது. அதன்படி முதல் மாறுதலாக புதிய கடன் அட்டையை வங்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பினால் அந்த அட்டையை ஆக்டிவேட் செய்ய ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட்டை வங்கி வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டும்.
அந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்குள் அட்டையை ஆக்டிவேட் செய்ய வேண்டும். அவ்வாறு ஒரு வாடிக்கையாளர் கடன் அட்டையை ஆக்டிவேட் செய்யவில்லை என்றால் வங்கி தரப்பில் இருந்து வாடிக்கையாளருக்கு கடன் அட்டையை ஆக்டிவேட் செய்ய கோரிக்கை அனுப்பப்பட வேண்டும்.
வாடிக்கையாளர் அதனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே கடன் அட்டையை வங்கிகள் ஆக்டிவேட் செய்ய வேண்டும். வாடிக்கையாளர் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்தால் எந்தக் கட்டணமும் விதிக்கப்படாமல் வங்கிகள் கடன் அட்டையை டிஆக்டிவேட் செய்ய வேண்டும். இதன் மூலம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கடன் அட்டைகளை பயன்படுத்தி முறைகேடுகள் செய்வது தடுக்கப்படும்.
இரண்டாவது மாறுதலாக வாடிக்கையாளரின் கிரெடிட் லிமிடிற்கு மேல் வங்கிகள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. கடன் அட்டை வழங்கப்பட்ட பிறகு ஏதேனும் காரணங்களுக்காக வாடிக்கையாளர் கிரெடிட் லிமிட்டை அதிகரிக்க வங்கியை கேட்டுக் கொண்டால் வாடிக்கையாளரின் ஒப்புதல் கடிதத்தை பெற்றுக் கொண்ட பிறகே வங்கிகள் கிரெடிட் லிமிட்டை உயர்த்த வேண்டும்.
மூன்றாவது மாறுதலாக வங்கிகள் கிரெடிட் கார்ட் நிலுவைத் தொகைக்கு எவ்வளவு வட்டி வசூலிக்கப்பட்டுள்ளது, அபராதம், வரி போன்ற பிற கட்டணங்களை வங்கிகள் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்ட் ஸ்டேட்மெண்டில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் இன்று அக்டோபர் 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது. கடன் அட்டை பயன்படுத்துபவர்கள் இந்த மாறுதல்களை அறிந்து கொள்வது நல்லது.
2) டீமேட் கணக்குகளில் வரும் மாறுதல்கள்:
டீமேட் கணக்கு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 2 அடுக்கு பாதுகாப்பு (factor Authentication) முறையில் தமது கணக்கிற்குள் லாகின் செய்யும்பொழுது கடவுச்சொல்லுடன் பயோமெட்ரிக் முறையிலோ அல்லது otp அல்லது பின் முறையிலோ லாகின் செய்ய வேண்டும் என்ற புதிய உத்தரவை செபி பிறப்பித்துள்ளது.
இந்த இரட்டை அடுக்கு பாதுகாப்பு மூலம் முறைகேடுகள் நடைபெறுவது குறைக்கப்படும். இதனை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். டீமேட் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அக்டோபர் 1 முதல் இந்த புதிய நடைமுறைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
3) வருமான வரி கட்டுபவர்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர முடியாது:
வருமான வரி கட்டுபவர்கள் அக்டோபர் 1 முதல் அரசு அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர முடியாது என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. வருமானம் குறைவாக உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் பென்ஷன் அறிமுகம் செய்யும் இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய விதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. வாசகர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத பட்சத்தில் தொடர்ந்து இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும்.