நெய்வேலி அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 25 சவரன் நகை பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் திருடன் சிக்காமல் இருக்க சிசிடிவி காட்சிகள் பதிவாகும் இயந்திரத்தையும் (ஹார்ட் டிஸ்க்) எடுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் உள்ள வி கே சாமி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷாகி நிஷா. இவர் பண்ருட்டி அடுத்த காங்கிருப்பு அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் வெளிநாட்டில் உள்ள தனது கணவரை பார்க்கச் சென்றுள்ளார் ஷாகி நிஷா.
இதை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து, படுக்கையறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 25 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து விட்டு வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் உடைத்து விட்டு சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்த ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்று விட்டனர்.
மேலும் இதேபோல் அடுத்து இரண்டு வீடுகளிலும் பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரில் நெய்வேலி டவுன்ஷிப் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இன்று சம்பவம் நடந்த இடத்தில் கைரேகை, தடயவியல் நிபுணர்கள் மற்றும் கடலூர் மாவட்ட மோப்பநாய் கூப்பர் உதவியுடன் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் 25 பவுன் தங்க நகைகளை திருடியது மட்டுமில்லாமல், அவ்வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளைப் பதிவுசெய்யும் ஹார்ட் டிஸ்கையும் அடுத்தடுத்த 2 வீடுகளில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் திருடிச் சென்றுவிட்டான் அந்த மர்ம திருடன். காவலர்கள் பற்றாக்குறை காரணமாக போதிய அளவு இரவு ரோந்து பணியை மேற்கொள்ள முடியவில்லை என காவலர்கள் தரப்பில் இதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM