புதுடெல்லி: உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஒரே நாளில் குறிப்பிட்ட நீதிபதிகள் அமர்வு 75 வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று காலை வழக்கம் போல் வழக்கு விசாரணையை தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சில வழக்குகளில் உத்தரவுகளும், தீர்ப்புகளும் வழங்கப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகிய இருவரும் நேற்றிரவு 9.10 மணி வரை வழக்குகளை விசாரித்தனர்.
இந்த அமர்வு நேற்று மட்டும் 10 மணி நேரம் 40 நிமிடங்கள் வழக்கு விசாரணைகளை மேற்கொண்டது. மொத்தம் 75 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றைய லிஸ்டில் இருந்த அனைத்து வழக்குகளின் விசாரணை முடிந்ததும், அனைத்து நீதிமன்ற ஊழியர்களுக்கும் நீதிபதி டிஒய் சந்திரசூட் நன்றியை தெரிவித்தார். ஏற்கனவே கடந்த மாதம் ஆகஸ்ட் 16ம் தேதி, நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இரவு 7.45 மணி வரை வழக்குகளை விசாரித்தது. தற்போது 10 மணி நேரம் 40 நிமிடங்கள் வழக்குளை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வு விசாரித்து சாதனை படைத்துள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.