உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆலோசனைக்கமைய உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு ஆரம்பமானது.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 1989 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய, 18 வயதிற்கு உட் பட்ட அனைத்துப் பிரஜைகளும் சிறுவர்களாகக் கருதப்படுவார்கள்.
1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய உலக வயோதிபர் தினம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டளவில் உலகில் 1200 கோடி மக்கள் வயோதிபர்களாக இருப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாம் அனுபவிக்கும் பல உரிமைகளை எமக்கு பெற்றுத் தந்த வயோதிபர்களை கௌரவத்துடன் நன்றி கூற வேண்டும்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தேசிய நிகழ்வு பத்தரமுல்ல செத்சிறிபாயவில் இன்று இடம்பெறவுள்ளது. ராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க, சாந்த பண்டார ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறும்.
இதேவேளை, அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் தலைமையில் மற்றுமொரு நிகழ்வு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று இடம்பெறும்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடாளவிய ரீதியிலுள்ள அதிகளவான பாடசாலைகளில் நேற்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை நாளை மறுதினம் திங்கட்கிழமையும் பல பாடசாலைகளில் உலக சிறுவர் தின வைபவஙகள் இடம்பெறவுள்ளன. பிரதேச
செயலக மட்டத்திலும் சிறுவர் தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு பொது நூலகத்திற்கு அருகில் கண்காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது. இதன் காரணமாக மார்க்கஸ் பெர்னாண்டோ சுற்று வட்டத்தில் இருந்து ஹோட்டன் சுற்று வட்டம் வரையான வீதி, மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.