கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி காப்புக்காட்டில் ஏராளமான மான்கள் உள்ளன. இந்த மான்கள், சில நேரங்களில் இரை தேடியும் மற்றும் தண்ணீர் குடிப்பதற்காகவும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன. ஊரப்பாக்கம் அருகே யமுனை நகர் மற்றும் பெரியார் நகரை இணைக்கும் பிரதான சாலையோரத்தில் உள்ள குப்பைமேட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு மான் உண்ணும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், பெருமாட்டுநல்லூர், கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், ஊனமாஞ்சேரி ஆகிய பகுதிகளில் காப்பு காடுகள் உள்ளன.
இங்கு 500க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் மற்றும் சாம்பார் மான்கள் சுற்றி திரிகிறது. பகல், இரவு நேரங்களில் சுதந்திரமாக சுற்றி திரியும் மான்கள், தண்ணீர் மற்றும் இரைதேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. அவற்றை சில நேரங்களில் தெரு நாய்கள் கடித்து கொன்று விடுகிறது. மர்மமான முறையில் இறந்து கிடப்பதும் வழக்கமாக உள்ளது. மான்களை பாதுகாக்க காப்புக்காட்டை சுற்றிலும் முள்வேலி அமைக்க வேண்டும் என வனத்துறை அலுவலர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை. பசிக்காக குப்பைமேட்டில் கிடக்கும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவை உண்பதால் இறக்கும் ஆபத்து உள்ளது. எனவே மான்களை பாதுகாக்க காப்புகாட்டை சுற்றிலும் முள்வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.