ஓசி டிக்கெட் விவகாரம்: மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கோவை மாவட்ட எஸ்பி தகவல்

கோவை: அரசு பேருந்தில் ஓசி பயணம் செய்ய மாட்டேன் என கூறிய மூதாட்டி மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில்,  அந்த மூதாட்டி மீது எந்த வழக்கும் பதிவும் செய்யப்படவில்லை மற்றவர்கள்மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாரயணன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் இருந்து பாலத்துறைக்கு சென்ற அரசு இலவச மகளிர் பேருந்தில் ஏறிய துளசியம்மாள் என்ற மூதாட்டி, தனக்கு ஓசி டிக்கெட் வேண்டாம், காசை வாங்கிக்கொள் என கூறி மூதாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ வைரலானது.

இந்த மூதாட்டி அதிமுகவைச் சேர்ந்தவர் என்றும், அதிமுக ஐடி விங் உறுப்பினர் ஒருவர், இதுபோன்று அந்த மூதாட்டியை பேச வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டதாக திமுக செய்திதொடர்பாளர் ராஜிவ்காந்தி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் காவல்நிலையத்தில் புகார் கூறப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அரசியல் ரீதியாக நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இப்படி செய்திருப்பதாக திமுகவினர் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக மதுக்கரை நகர திமுக செயலாளரான ராமு, மதுக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுகவை சேர்ந்த பிரித்விராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த், மூதாட்டி துளிசியம்மாள் ஆகிய 4 பேர் மீதும் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அமைதியை சீர்குலைத்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதுக்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட  பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் நெட்டின்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட   எஸ்பி பத்ரிநாரயணன்,  அரசுப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய மாட்டேன் எனக் கூறிய மூதாட்டி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்ததாகவே  கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாரயணன் தெரிவித்துள்ளார்.

மூதாட்டியை தூண்டிவிட்டு வீடியோ பதிவு செய்த அதிமுகவை சேர்ந்த பிரித்விராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் ஆகிய 3 பேர் மீது மட்டுமே மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை சேர்ந்தவர்: ஓசி டிக்கெட் வாங்க மறுத்த மூதாட்டி மீது காவல்துறை வழக்கு பதிவு…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.