]கடற்றொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதிய திட்டமும், புதிய காப்புறுதி திட்டமும் அறிமுகப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீர் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த காவத்த தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் சமூகத்தை அண்டி வாழ்வோரின்; மனநிலையை மேம்படுத்துவதற்காக அவர்களின் பிள்ளைகளின் ஆற்றலுக்கான வேலைத்திட்டம் என்ற தொனிப்பொருளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
கடற்றொழிலாளர்கள் மாதாந்த கொடுப்பனவை பெறுபவர்கள் அல்ல இதனால் இவர்கள் தங்களது உழைப்பில் கிடைக்கப்பெறும் பணத்திலே வாழுகின்றனர்.
இவர்களுக்கு நிரந்தர வருமானம் இல்லாமையால் சேமிப்பும் இல்லை இதன் காரணமாக அவர்களது வாழ்க்கையின் இறுதிக் காலப்பகுதியில் எந்த வித சேமிப்பும் இல்லை. இந்த நிலையில் கடற்றொழிலாளர் ஒருவர் திடீரென உயிரிழந்தால் அவரைச் சார்ந்த குடும்பத்தினர் நிற்கதிக்கு உள்ளாகின்றனர்.
இதனால் இவர்களுக்காக புதிய ஓய்வூதிய கொடுப்பனவு முறை ஒன்றை ஏற்படுத்துவதற்கு தமது திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
கடற்றொழில் அனர்த்தம் மிக்க ஒன்றாகும். இதனால் இவர்களுக்காக காப்புறுதி முறை ஒன்றை ஏற்படுத்துவதற்கு தமது திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இடம்பெறும் கடற்றொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி உத்தேச காப்புறுதி திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடற்றொழிலாளர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவருக்குரிய காப்புறுதி இழப்பீட்டு தொகை சம்பந்தப்பட்டவரின் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட குடும்ப மாணவர்களுக்கு கல்வியை நிறைவு செய்யும் வகையில் ஏதாயினும் கொடுப்பனவை இலங்கை வங்கியின் மூலம் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கடற்றொழில் மற்றும் நீர் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த காவத்த மேலும் தெரிவித்துள்ளார்.