பாட்னா: முதல்வர் பதவி குறித்த விவகாரத்தில் எனக்கென்று தனிப்பட்ட லட்சியம் ஏதுமில்லை என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் ஜெகதானந்த் சிங் டெல்லியில் அளித்த பேட்டியில், ‘துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் அடுத்த ஆண்டு பீகார் முதல்வராக பதவியேற்பார்’ என்று கூறினார். இவரது பேச்சால் கூட்டணிக்குள் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘எனக்கென்று தனிப்பட்ட லட்சியம் எதுவும் இல்லை; அதற்காக நான் அவசரப்படவும் இல்லை. எங்களது கட்சியினர் எல்லை மீறிச் செல்ல முனைகிறார்கள்; எதிர்காலத்தில் யார் முதல்வர் என்பதை இப்போது சிந்திக்க வேண்டியதில்லை. எனவே கட்சித் தலைவர்கள் தேவையற்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். பாசிச பாஜகவை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். பீகாரில் நடந்ததை போன்று, தேசிய அளவில் நாம் சாதிக்க வேண்டும்’ என்றார்.