நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடைச்சி விளையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர், தனது மனைவி சுகன்யா(33) மற்றும் குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில், தசரா திருவிழாவிற்கு தனது குடும்பத்தினர் ஊருக்கு செல்வதற்காக கோவையில் இருந்து திசையன்விளை செல்லும் ஆம்னி பஸ்சில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
நேற்று, தனது மனைவி, 3 வயது மற்றும் 4 வயது குழந்தைகள் மற்றும் உறவுக்கார பெண் ஆகியோரை அந்த பஸ்சில் முத்துகிருஷ்ணன் அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் வந்த பஸ் ஓட்டன்சத்திரத்தில் இரவு உணவுக்காக நின்றபோது, சுகன்யாவிடம், குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கும்படி கண்டக்டர் கூறியுள்ளார். அதற்கு அவர், தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.
அதை ஏற்காத கண்டக்டர், அவர்கள் அனைவரையும் பஸ்சை விட்டு கீழே இறக்கிவிட்டுள்ளார். அவர்கள் நிலை அறிந்த சக பயணி ஒருவர் சிறுவர்களுக்கான கட்டணம் 600 ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பின்பு அவர்கள் பஸ்சில் ஏறியுள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து சுகன்யா அவரது உறவினர்களிடம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அந்த பஸ் திசையன்விளை அருகே உள்ள சண்முகபுரத்திற்கு வந்தபோது மறித்து, சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார், பஸ்சை மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அதை தொடர்ந்து இருதரப்பினரிடையே நடந்த பேச்சுவார்த்தையில், ஆம்னி பஸ் நிர்வாகத்தின் சார்பில் நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆம்னி பஸ் விடுவிக்கப்பட்டது.