சாப்டூர் வனச் சரகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே இந்தக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு விழா கடந்த 26-ம் தேதி காலை 5 மணிக்கு காப்பு கட்டும் வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கொலு வீற்றிருக்கும் அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
இதையடுத்து, நவராத்திரி திருவிழா வழிபாட்டிற்காக கடந்த 26-ம் தேதி முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்களுக்கு சதுரகிரி மலைக் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், சதுரகிரி மலைப்பாதையில் சாப்டூர் வனச்சரகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ தொடர்ந்து பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.