காந்திய ஜெயந்தி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த விசிகவின் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி வரும் 11ஆம் தேதி நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதாலும், அக்டோபர் 2 ஆம் தேதி நடத்தப்படவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும் சட்டம், ஒழுங்கு சூழலைக் காரணம் காட்டி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்விற்கும் காவல்துறை அனுமதி மறுத்தது.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்தும், அக்டோபர் 2 அன்று அனுமதி வழங்க இயலாமைக்குரிய காரணங்கள் குறித்தும் காவல்துறை விளக்கியது.
மனித சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில், அக்டோபர் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி நடைபெறும் என அறிவித்தார். இதற்கு தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in