தமிழ் சினிமாவின் முகங்களில் முக்கிய முகமாக இருந்தவர் சிவாஜி கணேசன். நாடகங்களில் தனது பயணத்தை ஆரம்பித்த அவர் சினிமாவில் கோலோச்சுவதற்கு அவரது நடிப்பு பெரிதும் உதவியது. தனது முதல் படமான பராசக்தியில் நடிப்பையும், கலைஞர் கருணாநிதியின் வசனத்துக்குரிய சரியான பாவனைகளையும் வைத்து அசத்தியிருந்தார். அன்றிலிருந்து தமிழ் சினிமா நடிகர்கள் பராசக்திக்கு முன் பராசக்திக்கு பின் என தங்களை வகுத்துக்கொண்டனர்.
நம் அன்றாட வாழ்விலேயே கூட யாரேனும் நம்மிடம் நடிக்கிறார் என்றால் “இவரு பெரிய சிவாஜி” என கூறும் அளவுக்கு அவரது தாக்கம் நம்மில் கலந்திருக்கிறது.சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் தொடங்கி இன்றைய காலகட்ட நடிகர்கள்வரை சிவாஜியைத்தான் தங்களது ஆதியாய் நினைக்கின்றனர்.
சிவாஜியின் நடிப்பு எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடப்படுகிறதோ அதே அளவுக்கு மற்றொரு தரப்பினரால் சிவாஜி ஓவர் ஆக்டிங் என்ற விமர்சனமும் வைக்கப்பட்டுவருகிறது. ஆனால், தங்கப்பதக்கம் திரைப்படத்தில் கே.ஆர்.விஜயா உயிரிழந்து அவரை சிவாஜி பார்க்கும் காட்சியில், செவாலியே மேல் வைக்கப்பட்ட மிகை நடிப்பு விமர்சனத்தை அடித்து சுக்கு நூறாக்கியவர் மகேந்திரன். ஏனெனில் தங்கப்பதக்கம் படத்துக்கு கதையும், வசனமும் எழுதியது மகேந்திரன்.
அப்படிப்பட்ட மகேந்திரன், சிவாஜி மீது வைக்கப்படும் மிகை நடிப்பு விமர்சனத்துக்கு மிகச்சிறந்த விளக்கம் அளித்திருக்கிறார். மகேந்திரன் உயிருடன் இருந்தபோது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சிவாஜி கணேசனை சிலர் ஓவர் ஆக்டிங் என்று சொல்வார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் சிவாஜியின் நடிப்பு மிகச்சிறந்தது. அந்த நடிப்புக்கேற்ற கதையையோ, சினிமாவையோ யாரும் செய்யவில்லை” என்று பேசியிருக்கிறார். மகேந்திரனின் இந்த பதிலை சிவாஜி கணேசனின் பிறந்தநாளான இன்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அதிகம்பேர் பகிர்ந்துவருகின்றனர்..