சென்னை: சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 சோழர் கால சிலைகள், 15-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 தஞ்சாவூர் ஓவியங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரது வீட்டில் விலை மதிப்பற்ற சோழர் கால வெண்கல சிலைகள், பழங்கால தஞ்சாவூர் ஓவியங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையின் சிலை கடத்தல்தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பிரிவின் டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் உத்தரவிட்டனர். அதன்படி, டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு சோழர் காலத்தைசேர்ந்த 7 வெண்கல சிலைகள், 15-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 தஞ்சாவூர் ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர் தற்போது அமெரிக்காவில் உள்ளதாக, அந்த வீட்டைபராமரித்து வருபவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை போலீஸார் போனில் தொடர்பு கொண்டு, சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள் தொடர்பான ஆவணங்களை கேட்டனர். ‘‘பழங்கால சிலைகள், ஓவியங்களை என் பெற்றோர் வைத்திருந்தனர். அதுசம்பந்தமான ஆவணங்கள் எதுவும் இல்லை’’ என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து, சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்களை போலீஸார் கைப்பற்றினர். இந்த சிலைகள் தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டவையாக இருக்கலாம்என்ற சந்தேகம் இருப்பதால், அதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிலைகளை மீட்ட தனிப்படையினரை டிஜிபி சைலேந்திர பாபு நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.