சென்னையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்திற்கு, வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டுவதாகவும், பயிற்சி முகாம்கள் நடத்தி தீவிரவாத இயக்கங்களுக்கு ஆள் சேர்ப்பதாகவும் குற்றஞ்சாட்டி அந்த அமைப்புக்குச் சொந்தமான தமிழகம், கேரளா ஆகிய மாநிங்களில் உள்ள அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகிய இடங்களில் கடந்த மாதம் 22 ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் கூட்டு இயக்கங்களைச் சேர்ந்த 11 பேர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அதில் 8 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3 பேர் மேல் விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உட்பட 5 அமைப்புகளை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்பட தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்சியாக தமிழக அரசு சார்பிலும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தமிழகத்தில் இயங்க தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகத்திற்கு இன்று காலை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த கட்டிடத்தின் உரிமையாளர்கள் அனீஃபா மற்றும் சாகீர் ஹுசைன் ஆகியோரை நேரில் வரவழைத்து கட்டிடத்தில் உள்ள எந்தப் பொருளுக்கும் சேதம் ஏற்படுத்தவில்லை என்பதை காட்டி கையொப்பம் பெற்றனர். பின்னர் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகத்தின் பெயர் பலகையை அகற்றி அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM