டெல்லி: கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடி வசூலாகி உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 26% அதிகமாக வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 7-வது முறையாக 1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடியில், ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.25,271 கோடியும் மாநில ஜிஎஸ்டி ரூ. 31,813 கோடியும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,464 கோடியும் (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட ரூ.41,215 கோடி உட்பட) வசூலாகியுள்ளது.
மேலும் செஸ் வரி ரூ. 10,137 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்படும் ரூ. 856 கோடி உட்பட) வசூலாகியுள்ளதாக அமைச்சகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் செப்டம்பர் 20-ம் தேதி மட்டும் ரூ. 49,453 கோடி வசூலாகியுள்ளது. இது இரண்டாவது அதிகபட்ச ஒற்றை நாள் ஜிஎஸ்டி வரி வசூல் ஆகும். இதற்கு முன் 20 ஜீலை 2022 அன்று ரூ.57,846 கோடி வசூலானது.
செப்டம்பர் மாத வசூலானது, கடந்த ஏப்ரல் மாதம் வசூலான 1,67,540 கோடிக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய தொகையாகும். கடந்த ஜீலை மாதம் ரூ.1.48 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. மாநில ஜிஎஸ்டி வருவாயில் மராட்டியம் அதிகபட்சமாக ரூ. 21,403 கோடி வசூலாகியுள்ளது. அதை தொடர்ந்து கர்நாடகா (ரூ. 9,760 கோடி), குஜராத் (ரூ. 9,020 கோடி), தமிழ்நாடு (ரூ. 8,637 கோடி) தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் (ரூ. 7,842 கோடி) மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு (ரூ. 8,637 கோடி) 10 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.