தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க ‘பாஸ்டேக்’ திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக, தேசிய மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் பணப் பரிமாற்ற வங்கிகள் மூலம் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. வாகனங்கள் செல்லும்போது சுங்கச்சாவடிகளில் உள்ள மின்னணு கருவி மூலம் வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம் எடுத்துக்கொள்ளப் படுகிறது. இதன் மூலம், வாகனங்கள் காத்திருப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாகனங்களின் காத்திருப்பு தொடர்கிறது.
‘பாஸ்டேக்’ நடைமுறை தோல்வி அடைந்துள்ளதால், வெளிநாடுகளில் உள்ளது போல ‘ஜிபிஎஸ்’ முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதற்காக, சுங்கச்சாவடிகளின் அருகில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
வாகனங்கள், சுங்கச்சாவடிகளை கடக்கும்போது ஜிபிஎஸ் கருவி மூலம் அடையாளம் காணப்பட்டு, வங்கிக் கணக்குகளில் இருந்து சுங்கக் கட்டணம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. சுங்கக் கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் செல்லவும் அதிக வாய்ப்புள்ளது.
இருப்பினும், சோதனை முறையில் அடுத்த ஆண்டு (2023) ஜனவரியில் இந்த திட்டத்தை பல்வேறு சுங்கச்சாவடிகளில் செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதற்காக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் மாவட்டங்களில் உள்ள 10 சுங்கச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.