புதுடில்லி: காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் புதுடில்லியில் வரும் 25ம் தேதி முதல் வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டில்லி போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது: மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம் என்ற முடிவு கடந்த 29ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், சுற்றுச்சூழல், போக்குவரத்து, போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், சான்றிதழ் கட்டாயமாக்குவது மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. டில்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் முக்கிய காரணம். இதனை குறைக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால், வாகன ஓட்டிகள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழை காண்பிக்காவிட்டால் பெட்ரோல், டீசல் போடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் நடைமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும், அவர்களின் வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி போக்குவரத்து துறையின் கணிப்பின்படி, கடந்த ஜூலை வரை 13 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 3 லட்சம் கார்கள் உள்ளிட்ட 17 லட்சம் வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமல் இயங்கி வருகின்றன. மோட்டார் வாகன சட்டத்தின்படி, அந்த வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement