டெல்லியில் நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் அதிவேக 5ஜி இணைய சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லி: அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை டெல்லியில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலையில் நடந்தது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய  நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. ஏலத்தின் முடிவில் ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டது. தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து அக்டோபருக்குள் சில முக்கிய நகரங்களில் 5 ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  கூறியிருந்தார். இந்நிலையில், ஆசியாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப  கண்காட்சியான, ‘இந்திய கைப்பேசி மாநாடு’ டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று  முதல் வரும் 4ம் தேதி வரை நடக்கிறது. ஒன்றிய தொலைத் தொடர்பு துறை  மற்றும்  இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இதை நடத்துகின்றன.

இந்த  மாநாட்டின் முதல் நாளான இன்று, 5ஜி சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். இந்தியாவை பொறுத்தமட்டில் தற்போது வரை 4ஜி சேவையை மட்டுமே நடைமுறை உபயோகத்தில் உள்ளது. 4ஜி சேவையை விட பலமடங்கு வேகத்தில் இணைய வசதியை மக்களுக்கு அளிக்கவே 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாகூர், ராஜூவ் சந்திரசேகர் மற்றும் அம்பானி உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.