திருவனந்தபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை நடைபெறும் கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது தேசிய மாநாடு விஜயவாடாவில் நடைபெற உள்ளது. இதையொட்டி 4 நாள் நடைபெறும் கேரள மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. திருவனந்தபுரம் புத்தரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பன்யன் ரவீந்திரன் கட்சிக் கொடி ஏற்றினார்.
இதில் கேரள மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன், மூத்த தலைவர்களான திவாகரன், சந்திரசேகரன், சத்யன் மொகேரி, பினோய் விஸ்வம் எம்பி., மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் 2வது நாளான இன்று (அக்.1) காலை பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா மாநாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாலை 5 மணியளவில் திருவனந்தபுரம் தாகூர் அரங்கத்தில் கூட்டாட்சியும், மத்திய, மாநில உறவுகளும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார்.
இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் அதுல்குமார் அஞ்சான் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். விமான நிலையத்தில் கேரள மாநில திமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மு. க. ஸ்டாலினை வரவேற்பதற்காக கேரளாவில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திமுக தொண்டர்கள் திருவனந்தபுரத்தில் குவிந்துள்ளனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட பிறகு இன்று இரவு 7 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.