மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய துறைகளை அரசு நிர்வாகம் செய்தால் மட்டுமே பொது மக்களுக்குக் குறைந்த விலையில் தரமானதாகவும் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் பொது நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது. அவசரமாக்கப்பட்ட நகரத்தில் விபத்துகள் ஏராளம். மருத்துவமனை இல்லாத கிராமங்களில் மக்கள் தொலைதூரம் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். திடீரென மாரடைப்போ, பிரசவ வலியோ ஏற்பட்டால் வாகன வசதி உடனே கிடைப்பதில்லை.

இது போன்ற அவசரக்காலத்தில் உதவுவதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் சேவை அனைவராலும் பாராட்டப்பட்ட சேவை திட்டம். தமிழக அரசுக்கும், ஜிவிகே ஈ.எம்.ஆர்.ஐ நிறுவனத்துக்கும் இடையிலான PPP ( Public Private property) ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்குகிறது. ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ நிறுவனம் கிராமப்புறங்களில் 108 இரவு சேவையை நிறுத்தி வைப்பதாகவும், ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகமெங்கும் அவ்வப்போது போராட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரிடம் பேசினோம். அவர் “தினமும் 12 மணி நேரம் நிறுவன கணக்கிற்கு வேலை செய்கிறோம். ஆனால், திடீரென்று எங்காவது விபத்து, அவசரமென்றால்12 மணி நேரம் 16 மணி நேரம் கூட ஆகலாம். சாப்பிடக் கூட நேரமில்லாமல் வேலை செஞ்சிட்டு இருக்கிறோம். எங்களுக்கு அரசு விடுமுறை எல்லாம் கிடையாது. கூடுதலாக வேலை பார்த்தாலோ, அரசு விடுமுறையில் வேலை பார்த்தாலோ கூடுதல் சம்பளம் கிடையாது. ஓய்வின்றி வண்டி ஓட்டுவதால் முதுகு தேஞ்சுகிட்டேவருது.

ஆம்புலன்ஸைப் புறப்படுவதற்கு முன் ஒரு இடத்தில் நிறுத்தி வைப்போம். அந்த இடத்துக்கு ஹால்ட் என்று சொல்லுவாங்க. எங்களுக்கு அங்கு போதுமான கழிப்பறை வசதி இல்லை. இதனால் பெண் ஊழியர்கள்தான் கூடுதல் சிரமம். எங்களின் உரிமைகளைக் கேட்டால், தொழிற்சங்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டால் பணியிடை நீக்கம், இடமாறுதல் போன்ற நடவடிக்கையில் ஜி.வி.கே ஈ.எம்.ஆர் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது” என்றார்.
ஆம்பலன்ஸ் சேவைக்கான தொழிற்சங்கம் COITU ( Centre organisation of Indian Trade union) ராஜேந்திரனிடம் பேசினோம். அவர், “தமிழ்நாடு முழுவதும் சராசரியா ஆறாயிரத்துக்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர், அவசரக்கால மருத்துவ நிபுணர், ஓட்டுநர், கால் சென்டர் தொழிலாளர்கள் ஆகியவரும் அடங்குவர். அரசு சேவையான இந்த திட்டத்தில் போதுமான சம்பளம் இல்லை. தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. பேறு காலத்தில் விடுமுறை எடுக்கும் பெண் தொழிலாளர்களுக்கு அந்த வருடம் ஊக்கத்தொகை, போனஸ் போன்றவற்றை நிறுத்துகின்றனர். ஒரு பெண் தொழிலாளி பணியில் இருக்கும் போது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாததால் பால் கட்டி வலியால் துடிக்கிறார். அவர் நிறுவனத்திடம் லீவு கேட்டதற்கு நேரில் வந்து லீவு லெட்டர் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.

நிர்வாகம் வலியால் துடிப்பவர் எப்படி அலுவலகத்துக்கு நேரில் வந்து விடுப்பு கேட்க முடியும்? இது மனித உரிமை மீறல். தொழிலாளர்களின் தண்ணீருக்காக மாதம் முந்நூறு ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இன்று தண்ணீர் கேன்களின் விலை அதிகமாகிவிட்டது வெயில் அதிகமாக இருப்பதால் தண்ணீர் போதுமானதா இல்லை. இவையனைத்தை விட முக்கியமான பிரச்னை கிராமங்களில் இரவு சேவையை நிறுத்தி வைக்கிறது. ஆள் பற்றாக்குறை என்று போலியான காரணத்தை நிறுவனம் முன்வைக்கிறது. புதிதாகத் தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட்டாலும் இன்னும் பணியமர்த்தாமல் காலதாமதமாகிறது. இரவு சேவைகளை நிறுத்துவதால் ஆள் சம்பளம் மிச்சம், வண்டிக்கான பெட்ரோல் மிச்சப்படுத்திக் குறைந்த விலையில் சேவையை இயக்கி வருகிறோம் என்று அரசாங்கத்திடம் நிரூபிக்க முயல்கிறது. இதன் மூலம் கான்ட்ராக்டை தக்கவைத்துக்கொள்ளத் துடிக்கிறது ஜி.வி.கே ஈ.எம்.ஆர் நிர்வாகம்” என்றார்.
சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் திருவேட்டையிடம் பேசினோம். அவர், “பகலை காட்டிலும் இரவில் தான் ஆம்புலன்ஸின் தேவை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் வேறு வாகனத்தைப் பிடிப்பது சுலபமான காரியமல்ல. அப்படியிருக்கையில் ஆம்புலன்ஸ் சேவையை நிறுத்துவது பொது மக்களைப் பாதிக்கும். தொழிலாளர்கள் 8 மணி நேரம் தான் வேலை பார்க்கனும். ஆனால் இங்க 12 மணிநேரம் வேலை பார்க்கிறார்கள். இதனால் தொழிலாளர்கள் குடும்பத்துடன் நேரம் கழிக்காமல் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். கொரோனா காலங்களில் வேலை செய்த முன் களப்பணியாளர்களான மருத்துவர் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆனால், இவர்களுக்கு வழங்கப்படவில்லை. குறைந்தது ஒரு மாத சம்பளமாவது ஊக்கத்தொகையாக வழங்கப்பட வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை விட்டர்.

அவரின் அறிக்கைக்குப் பிறகு வெறும் 5,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. ஆம்புலன்ஸ் பொதுச் சேவை என்ற அடிப்படையில் இத்துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்சம் மாத சம்பளம் 26,000 கொடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்துகிறது. பெட்டிசன் போட்டால் மட்டுமே அரசு தொழிலாளர் பிரச்னையில் தலையிடும் என்று கூறுவது தன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கான செயலாகும்” என்றார்.
இது குறித்து சுகாதார செயலாளர் செந்தில் குமாரிடம் பேசினோம். அவர், “இந்த பிரச்னைகள் எதுவும் எங்கள் கவனத்துக்கு வரவில்லை” என்றார்.
பொதுச்சேவையில் உள்ள தொழிலாளர்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து பயணிக்க முடியும். இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.!