சென்னை: தோனியை எனக்கு பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு என்னை பினிஷிங் இன்னிங்ஸ் ஆட சொல்லி இருக்கிறார்கள் என ட்விட்டர் ஸ்பேஸில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணி கொண்டாடி வந்தது. இதற்காக கடந்த மாதம் தினந்தோறும் ட்விட்டர் ஸ்பேஸில் பல்வேறு திமுக தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் கடைசி நாளான நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். ட்விட்டர் ஸ்பேஸில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “திமுக ஐ.டி விங் சார்ப்பில் திராவிட இயக்கம் சார்ந்த அறிவார்ந்த உரையாடல்களை இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் ட்விட்டர் ஸ்பேஸில் டிஆர்பி ராஜா நடத்தி இருக்கிறார்.
திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கமும் கூட.. ஒருகாலத்தில் நமது கொள்கையை பரப்ப நடாக மேடை, பத்திரிகை, திரையுலகம் ஆகியவற்றை பயன்படுத்தினோம். கவிதையாக, கதையாக நாவலாக பரப்பினோம். அந்த வகையில் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் நம்மை இதில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். எதன் மூலமாக மக்களுடன் உரையாட முடியுமோ அதை எல்லாம் நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நமது சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் தளமாக நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தங்களுக்கு என்று வரலாறு இல்லாதவர்களும், பிற்போக்குவாதிகளும் திமுகவுக்கு எதிராக பரப்புரைகளை பல ஆண்டுகளாக பரப்பி வருகிறார்கள். இதெற்கெல்லாம் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கடிதங்கள் மூலமாகவும், அறிக்கைகள் மூலமாகவும் பதிலளித்திருக்கிறார்.ஆனாலும் தொடர்ந்து அவர்கள் அவதூறு பரப்ப காரணம் புதிதாக வரக் கூடிய இளைஞர்களுக்கு முதலிலேயே இந்த பொய்களை பரப்பிவிட வேண்டும் என்ற நோக்கம்தான். திமுகவுக்கு எதிராக பரப்படும் பொய் செய்திகளை ஐடி விங் திறமையாக எதிர்கொள்கிறார்கள்.அதே நேரத்தில் இன்னும் கூடுதல் வேகத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
அனைவரும் அறிவார்ந்த புத்தங்களை படியுங்கள். நமது சாதனைகளை எந்த அளவு பொதுவெளியில் பரப்புகிறீர்களோ அந்த அளவு நன்மைகள் நிகழும். நமது திராவிட அரசு செய்த சாதனைகளை கடந்த 29 நாட்கள் பேச வைத்துவிட்டு கடைசியாக தற்போது என்னை பேச வைத்திருக்கிறார் டிஆர்பி ராஜா. தோனியை எனக்கு பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு என்னை பினிஷிங் இன்னிங்ஸ் ஆட சொல்லி இருக்கிறார் டிஆர்பி ராஜா.
திராவிடம் தமிழர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியது. திராவிடம் சமூக நீதியை நிலையாட்டியது. திராவிடம் பெண்களுக்கு சம உரிமையை பெற்று தந்தது. திராவிடம் இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றியது. இதுதான் திராவிட அரசின் இலக்கணம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.