நடிகர் மீதான புகாரை வாபஸ் பெற்ற பெண் தொகுப்பாளர்

கடந்த வாரம் மலையாளத்தில் சட்டம்பி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி என்பவர் அந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக யு-டியூப் சேனல் ஒன்றில் கலந்துகொண்டு பேட்டியளித்தார். அப்போது அந்த நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளர் கேட்ட சில கேள்விகளால் எரிச்சலடைந்த அவர், தொகுப்பாளினியை அநாகரிக வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறை அவரை கைது செய்தது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் ஸ்ரீநாத் பாஷி. இவரது இந்த செயல் காரணமாக மலையாள தயாரிப்பாளர் சங்கம் இவர்மீது தற்காலிக தடை விதித்தது. இந்த நிலையில் நேற்று நடிகர் ஸ்ரீநாத் பாஷி மீது தான் கொடுத்திருந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார் சம்பந்தப்பட்ட பெண் தொகுப்பாளர்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'எனக்கு ஏற்பட்ட இதுபோன்ற ஒரு நிகழ்வு வரும் நாட்களில் இன்னொரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் சம்பந்தப்பட்ட நடிகர் மீது காவல்துறையில் புகார் அளித்தேன். அதன்பிறகு அந்த நடிகர் என்னை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தபோது அதை தவிர்த்துவிட்டேன். இந்தநிலையில் மலையாள தயாரிப்பாளர் சங்கம் அவர் மீது தற்காலிக தடை விதித்ததுடன் அது குறித்து பேசுவதற்காக தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்னை அழைத்திருந்தனர். அங்கே நடிகர் ஸ்ரீநாத் பாஷியும் வந்திருந்தார். நீண்ட நேரமாக அவர் அழுது இருந்ததால் கண்கள் கலங்கி இருந்தது. அந்த 50 நிமிட பேச்சில் அவர் தன்னுடைய தவறுகளை உணர்ந்து விட்டார் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது.

எனது நோக்கம் அவரை பழிவாங்க வேண்டும் என்பதல்ல.. என் புகாரால் அவரது குடும்பமும் அவரது திரையுலக பயணமும் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால் காவல் நிலையத்தில் நான் அளித்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டேன். பேட்டி கொடுத்த அந்த சமயத்தில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் அப்படி பேசிவிட்டேன் என்றும் கூறி அதற்காக மன்னிப்பு கேட்டார்” என்று கூறியுள்ளார் சம்பந்தப்பட்ட பெண் தொகுப்பாளர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.