நாம் கடவுளிடம் போய் பிரார்த்தனை செய்கிறோம் என்றால் எதற்காக? நம் மனதில் இருக்கும் சுக துக்கங்கள் எல்லாவற்றையும் அந்த கடவுளிடம் சொல்லிவிட்டு நீ எனக்கு நல்லவழி காட்டு என்று கூறி மன நிம்மதி அடையத்தான். அப்படி இந்த நவராத்திரி நாள்களில் அம்மனிடம் பிரார்த்தனை செய்யும்போது மனதறிந்து நாம் செய்த பாவங்களை எல்லாம் தவறென்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எந்த நிமிடத்தில் நாம் மனதார தவறை உணர்ந்து அம்மனுடைய பாதகமலங்களில் விழுகிறோமோ, அந்த நேரத்திலேயே அம்மன் நம்முடைய பாவ வினைகளை எல்லாம் போக்கிவிடுகிறாள்.
‘துர்கா’ என்று சொன்னாலே போதும். துர்க்கம் என்றால் கோட்டை என்று அர்த்தம். எதிரிகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது கோட்டை! அதுபோல துர்கையிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்றால் நமக்குள்ளே தீய எண்ணங்களை வரவிடாமல் தடுப்பாள்.
“ஆபத்துசு மக்நஹா ச்மரணம் த்வதீயம்”
ஆபத்துக்காலத்தில் அம்பாளுடைய சரணத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்கிறது இந்த ஸ்லோகம்.
அப்பொழுதுதான் நாம் தர்ம வழியில் நல்ல முடிவை எடுக்க முடியும். அதற்கு அந்த அம்மனே வழியைக் காட்டுவாள். கடவுள் நல்லவர்களைத் தான் சோதிப்பார் என்று சொல்லுவோம். ஏன் சோதிக்கிறார் என்றால் நமக்கு ஒரு ஆபத்து என்று வருகையில் அவருடையத் திருப்பாதங்களை வணங்கி தர்ம வழியில் நடக்கிறோமா இல்லையா என்று பார்க்கத்தான். அதனால் எந்தச் சூழ்நிலையிலும், சக்தியை நம் மனதில் வைத்து சுலோகம் சொல்லி ஆராதிக்க வேண்டும். அப்படி செய்தால் நமக்குக் கவலை என்பதே இல்லை. அம்பாளுடைய கருணைக்கு கீழ் வந்து விடுவோம். ஜகன்மாதா நம்மைக் காத்திடுவாள் என்ற நம்பிக்கையும் பிறக்கும்.
ஆறாவது நாள் சிறப்புகள்:
இந்த நவராத்திரி பண்டிகையின் ஆறாவது நாளில் அம்பாள் ஆறு வயது குழந்தையாக நமக்கு அருள்கிறாள். ஆறாவது நாள் அம்மன் சண்டிகா என்ற நாமத்துடன் அழைக்கப்படுகிறாள். இன்றைக்கான ஸ்லோகம்…
“சண்டிகாம் சண்டரூபாம் ச
சண்டமுண்ட விநாசினிம்
தாம் சண்டபாபஹரிணிம்
சண்டிகாம் பூஜையாம்யஹம்”
பொருள்: எந்த தேவி உக்ர ரூபமுடைவளாகவும் ராட்சஷர்களையும் அழிக்கும் சக்தி உடையவாளாகவும் இருக்கிறாளோ அந்த சண்டிகா தேவியை நான் பூஜிக்கிறேன்.
இந்த நாளில் அம்மன் காத்யாயனி என்ற பெயரும் பெற்று விளங்குகிறாள்.
“பஷ்டம் காத்யாயனி”
நவராத்திரியில் துர்காதேவி பலவிதமான ரூபத்தில் நமக்கு அருள்புரிகிறாள். அந்த ரூபங்கள் அனைத்திலும் பகைவரை அழிப்பதறகாக எடுத்த இந்த ரூபமே மிக பயங்கரமானது. இந்த அம்மனை மனதில் நினைத்து வணங்கினால் பகைவரை அழிக்கும் சக்தியை நமக்கு அருள்வாள்.
மேலும் இந்த நாளில் அம்மனை இந்திராணி ரூபத்திலும் வழிபடலாம். இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்ல தேக பலம் பெறலாம். அதற்கான சுலோகம்…
“ஓம் கஜத்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ இந்திரி ப்ரசோதயாத்”
வழிபாட்டு முறை:
இந்த நாளில் உளுந்து, துவரம் பருப்பு, கடலை பருப்பு போன்றவற்றைக் கலந்து மாவாக அரைத்து ஸ்வஸ்திக் அல்லது ஓம் என்ற வடிவத்திலோ கோலம் போட வேண்டும். சந்தன இலையால் பூஜை செய்து, செம்பருத்தி பூவால் அம்மனை அலங்கரிக்க வேண்டும். நைவேத்தியமாக தேங்காய் சாதம் செய்து வைக்க வேண்டும். நீலாம்பரி ராகத்தால் பாடி அம்மனை ஆராதிக்க வேண்டும். இந்த முறைகளைப் பின்பற்றி அம்மனை வழிபாடு செய்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். அறிவு பெருகும். அதனால் இல்லத்தில் செல்வம் அதிகரிக்கும்.