சென்னை: நடிகர் சங்க தேர்தலின்போது, நாசர் தலைமையிலான குழுவுக்கு எதிராக போட்டியிட்டு, வழக்கு போட்டு, தொல்லை கொடுத்த நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜை நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கி, நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துக்களை பரப்பியதாக கூறி, நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர். இந்த தேர்தல் வாக்குப்பதிவில் தில்லுமுல்லு நடை பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதிவான வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடது என தடை விதித்தது. இந்த வழக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற நிலையில், கடந்த மார்ச் மாதம் வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்று பதவியேற்று கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கத்தின் சார்பில் கே.பாக்யராஜ்க்கு நோட்டீஸ் அனுப்பட்டது. அதில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட நிர்வாகம் மற்றும் நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துகளை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருவதாகவும், இதனால் கே.பாக்யராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் பாக்யராஜூக்கு ஷோகாஸ் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்காத நிலையில், அவர்களை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க விதி 13-ன்படி சங்கத்திற்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்தி வாயிலாகவே அல்லது உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாகவோ கருத்து சொல்லக் கூடாது என விதி உள்ளதால் நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் மற்றும் உதயா உள்ளிட்ட இருவரையும் ஆறு மாத காலத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கே.பாக்யராஜ் சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக உள்ள நிலையில், அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் கோலிவுட் வாட்டராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.