நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி; சுங்க கட்டணத்துக்கு செம திட்டம்!

இந்தியா முழுதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 54 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பணம் இல்லாத பரிவர்த்தனை என்ற அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்காக, பாஸ்டேக் முறை அமல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தேசிய மற்றும் தனியார் பணப்பரிமாற்ற வங்கிகள் வாயிலாக பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக பாஸ்டேக் முறையை பின்பற்றும் வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் குறிப்பிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது அங்கு உள்ள மின்னணு இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருந்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இதுபோல் பாஸ்டேக் முறையை வாகன ஓட்டிகள் பின்பற்றும்போது வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வராது என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பார்த்தது போல் பாஸ்டேக் முறை கை கொடுக்காமல் வழக்கம் போல சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

இதன் மூலம் பாஸ்டேக் முறை தோல்வி அடைந்து இருப்பது உறுதியானதால், மாற்று வழியை நெடுஞ்சாலை ஆணையம் கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளதுபோல நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில், ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக அனைத்து சுங்கச்சாவடிகளின் அருகிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் அமைக்கப்பட இருக்கின்றன. இதன் மூலம் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது ஜிபிஎஸ் கருவி மூலம் அடையாளம் கண்டு சுங்கக்கட்டணம் வங்கிக் கணக்குகளில் இருந்து தானாகவே கழித்து கொள்ளப்பட இருக்கிறது.

அதே சமயம், இது போன்ற ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் கடந்து செல்லும் பல்வேறு நடைமுறை சிக்கல்களும் இருப்பதாக, பரவலாக சொல்லப்படுகிறது.

ஆனாலும், சோதனை முறையில் வருகின்ற ஜனவரியில் இந்த திட்டத்தை பல்வேறு சுங்கச்சாவடிகளில் செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி, சேலம், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி என்று மொத்தம் 10 சுங்கச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை ஆணையம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.