டெல்லி: பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையையே வழங்காத நிலையில், 2023ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி 5ஜி சேவையை தொடங்கும் என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் இன்று தொடங்கிய ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022’ மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப் படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல், வோடஃபோன் ஐடியா நிறுவன தலைவர் ரவிந்தர் தாக்கூர் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்தியஅமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இன்னும் 6 மாதங்களில் நாட்டில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டில் 90 சதவீத இடங்களில் 5ஜி சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது செய்தியாளர்களை பிஎஸ்என்எல் எப்போது 5ஜி சேவை கொடுக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்க பதில் அளித்த அமைச்சர், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்கும் என்றும் குறைந்த விலையில் 5ஜி சேவை கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
6வது இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….