புதுச்சேரி: புதுச்சேரியில் மின் துறை தனியார்மயத்தை எதிர்த்து மின் ஊழியர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், மின்சார தடையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார்மயமாக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் உருவாக்கிய போராட்ட குழு செப்.28-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மின் துறை தலைமையகத்தில் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலர் வேல்முருகன் தலைமையில் அனைத்து பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி ஏஐடியுசி தலைவர் சங்கரன், அரசு ஊழியர் சம்மேளன செயலர் ராதாகிருஷ்ணன், தமிழக மின்துறை பொறியாளர் சங்க செயலர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்று, ஆதரவு தெரிவித்து பேசினர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால் மின் பழுது, பராமரிப்பு, அலுவல் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின்பராமரிப்பின்றி மின் தடை ஏற்பட்டுள்ளது. சீர் செய்ய ஆளின்றி நீண்ட நேரம் மின் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் மக்கள், அந்தந்த பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கன்னியக்கோவில் புதுநகர், வாய்க்கால் ஓடை உள்ளிட்ட கிராமங்களில் திடீர் மின் தடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அங்கு குடிநீர் விநியோகமும் அடிக்கடி நிறுத்தப்பட்டதால், ஆத்திரமடைந்த புதுநகர் மக்கள் புதுச்சேரி – கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலின் போது, வீட்டிலிருந்த பெஞ்ச், நாற்காலி, மரப்பொருட்களை சாலையின் குறுக்கே வைத்தும், சாலையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருமாம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸார் நடவடிக்கையால், மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டதையடுத்து, மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதேபோல பாகூர் அடுத்த குருவிநத்தம் தூக்குப்பாலம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 22 பேரை பாகூர் போலீஸார் கைது செய்தனர். பாகூர் பகுதியில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை மின்சாரம் தடைபட்டிருந்ததால், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே மின் தடை சரியானதால், அவர்கள் கலைந்து சென்றனர்.