புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் கடன் வழங்குவதாக கூறி மக்களை அவதிக்குள்ளாக்கிய 55 கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் குறைந்த வருமானம் உள்ளவர்களை குறிவைத்து, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் செயலிகள் செயல்பட்டு வந்தது. ஆரம்பத்தில் கடன்பெறும்போது மிகவும் எளிமையான நடைமுறை என ஆசை வார்த்தைக் கூறி கடன் பெற்ற பொதுமக்களிடம், அதன்பின்னர் அதிக வட்டி, எந்த அறிவிப்பும் இல்லாத அபராதம் போன்றவற்றை கடன் வழங்கும் செயலிகளின் மூலம் போட்டு கடன்பெற்றவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். இதுபோன்ற புகார்கள் அதிகளவு புதுச்சேரி காவல் துறைக்கு வந்தது.
இதையடுத்து இதுதொடர்பாக ஆராய்ந்தபோது மத்திய அரசின் அனுமதி ஏதுமின்றி கடன் செயலிகளை நடத்தி வந்ததை அடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், மத்திய அரசின் உதவியுடன் 55 செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற கடன் செயலிகள் மோசடியில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது புதிய செயலிகளை ஏதும் பொதுமக்களை தொடர்பு கொண்டாலோ 1930 என்ற சைபர் கிரைம் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என புதுச்சேரி காவல் துறை தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM