புதுச்சேரி மாநிலத்தில் நாளை மாலை ஆர்எஸ்எஸ் பேரணி… காவல்துறை அனுமதி..

புதுச்சேரி: தமிழ்நாட்டில் நாளை ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழகஅரசு அனுமதி வழங்காத நிலையில், புதுச்சேரி மாநிலத்தில்  இரண்டு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.

மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் மற்றும் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவு, வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டு ஆகியவற்றை இணைத்து  கொண்டாடும் வகையில் புதுச்சேரி மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்கனவே மாநில அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதன்படி, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு புதுச்சேரி மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் நாளை மாலை ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறுகிறது. புதுச்சேரி காமராஜர் சாலையில் இருந்து மாலை 4மணிக்கு புறப்படும்  ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு  முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடலூர் சாலையில் உள்ள சிங்கார வேலர் சிலை அமைந்துள்ள இடத்தில் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறுகின்றது.

அதுபோல காரைக்காலில் நாளை மாலை 4 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் ஆர்எஸ்எஸ் பேரணி,  முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை சாலை சென்றடைந்து நிறைவுபெறுகிறது. பின்னர் பொதுக்கூட்டமும் நடைபெறுகின்றது.

ஆர்எஸ்எஸ் பேரணியைத் தொடர்ந்து மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அமைதியாக நடைபெற கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.