ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க தாமதமானதால் அவர் தனது மைக்ரோஃபோன் மைக் இணைப்பை துண்டித்து சுருக்கமாக உரையாற்றினார். பிரதமர் மோடி நேற்று குஜராத்தில் வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் தனது 7வது நிகழ்ச்சியாக ராஜஸ்தான் மாநிலம் சிரோஹியில் உள்ள அபு ராட் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றார். ஆனால் பிரதமர் மோடி அங்கு சென்றடைய இரவு 10 மணியாகிவிட்டது. திட்டமிடப்பட்ட பேரணியில் மோடி கலந்து கொண்டாலும் கூட, இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்திப் பேசக்கூடாது என்ற விதிமுறையை பின்பற்றினார்.
இதற்காக இரவு 10 மணியானதும் தனது மைக்ரோஃபோன் மைக் இணைப்பை துண்டித்தார். இந்த வீடியோ நேற்றிரவு முதல் வைரலாகி வருகிறது. அப்போது மோடி தனது சுருக்கமான உரையில், ‘நான் அபு ராட் சென்றடைய தாமதமாகிவிட்டது. இரவு 10 மணி ஆகிவிட்டதால் உரிய விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று எனது மனசாட்சி கூறுகிறது. எனவே உங்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். மீண்டும் இங்கு வந்து உங்கள் அன்பை வட்டியுடன் திருப்பித் தருவேன் என்பதை உறுதியளிக்கிறேன்’ என்று கூறினார்.