சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், இந்த சட்டத் திருத்தம் செல்லுமா, செல்லாதா என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி அல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், 103-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேற்றியது. அப்போதே இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் அமைப்புகள், தனிநபர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்தனர்.
குறிப்பாக ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், ‘‘திராவிட சித்தாந்தத்தின்படி, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவின் அடிப்படையில் இயங்கி வரும் திமுக, இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டு முறையை கடுமையாக எதிர்க்கிறது. ஏனென்றால், தமிழகத்தில் ஏற்கெனவே 69 சதவீதம், மற்ற மாநிலங்களில் 50 சதவீதம் இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இடஒதுக்கீடு என்பது சாதிய ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களை சமநிலைக்கு கொண்டுவர வழங்கப்பட வேண்டுமே தவிர, பொருளாதார அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு வழங்கி மீண்டும் பாகுபாடு காட்டக் கூடாது.
இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் தமிழகத்தில் இடஒதுக்கீடு 79 சதவீதமும், மற்ற மாநிலங்களில் 60 சதவீதமும் ஆகிவிடும். அப்படி இடஒதுக்கீடு வழங்கினால் சமூக நீதிக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராகிவிடும். தவிர, இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால், பிற சமூகத்தைச் சேர்ந்த திறமைசாலி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் பெறுபவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என இந்த சட்டம் வரையறை செய்கிறது. இந்தியாவில் 97 சதவீதம் பேரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு கீழ் உள்ள நிலையில், இந்த இடஒதுக்கீடு யாருக்கானது என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. எனவே, அரசியலமைப்பு சட்டத்தில் 103-வது திருத்தமாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்குகளை தொடர்ச்சியாக 7 நாட்களாக விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா திரிவேதி ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இந்த சட்டத் திருத்தம் செல்லுமா, செல்லாதா என்பது தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. இதுதொடர்பாக சட்ட வல்லுர்கள் கூறியதாவது:
திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான பி.வில்சன்: சமத்துவத்தை பின்பற்றச் சொல்லும் அரசியலமைப்பு சாசனப் பிரிவு 14-ஐ மத்திய அரசின் இந்த சட்டத் திருத்தம் கேள்விக்குறி ஆக்கியுள்ளது. மேலும் இது, இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரானது. சமூக பின்தங்கிய நிலையை வரையறை செய்ய, பொருளாதாரத்தை கருத்தில் கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் இன்னும் மோசமான நலிவுற்ற நிலையில் உள்ளனர். அனைத்து வகையான சுரண்டல்களில் இருந்தும் அவர்களை சட்ட ரீதியாக பாதுகாக்க வேண்டும் என அரசியலமைப்பு சாசனத்தின் 46-வது பிரிவு கூறுகிறது. மத்திய அரசின் 103-வது சட்டத் திருத்தம் சமத்துவத்தை பாதிக்கிறது என்பதால் அதை கடுமையாக எதிர்க்கிறோம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன்: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினர் என்றால் பிராமணர்களை மட்டுமே வைத்து பார்க்கக் கூடாது. அவர்கள் மட்டுமின்றி, செட்டியார், முதலியார், பிள்ளைமார் என பொதுப் பிரிவினரில் பல சமூகத்தினரும் இன்னமும் சாப்பாட்டுக்கே வழியில்லாத சூழலில் உள்ளனர். நாட்டு மக்கள் அனைவருமே சமமாக கருதப்பட வேண்டும். பட்டியலினத்தை சேர்ந்தவர்களில் 3-வது தலைமுறையினர் தற்போது அரசுப் பணிகளில் கோலோச்சுகின்றனர். அதேநேரம், முன்னேறிய சமூகம் என்று கூறப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினரில் முதல் தலைமுறைக்குகூட இன்னும் அரசு வேலைவாய்ப்பிலோ, கல்வியிலோ முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அனைவருக்கும் இடஒதுக்கீடு சலுகை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இந்த சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சட்டத் திருத்தம் செல்லுமா, செல்லாதா என்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கையில் உள்ளது.