புதுடெல்லி : நாடு முழுவதும் 8 மாநிலங்களில் சிபிஐ நடத்திய சோதனையில் பெருமளவு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்டர்போல், போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மாநில போலீஸார் உதவியுடன் சிபிஐ இந்த சோதனையை நடத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக சந்தேகத்திற்குரிய 6,600 பேரின் நடவடிக்கைகளை ஆராயும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது. ஆபரேஷன் கருடா என்ற இந்த நடவடிக்கை பஞ்சாப், இமாச்சலபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, மணிப்பூர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஹெராயின், கஞ்சா, ஓப்பியம் உள்ளிட்ட போதைப் பொருட்களும் பல்வேறு வகை போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக, 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக சிபிஐ இம்மாதத்தில் மேற்கொண்ட இரண்டாவது நடவடிக்கை இதுவாகும். சோதனை மூலம் பெறப்பட்ட தகவல்கள் இன்டர்போல் வழியாக உலகளாவிய சட்ட அமலாக்க அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.