மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள் உண்மை சான்றிதழ்களை திரும்ப வழங்க கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ மேற்படிப்பை முடித்த இரண்டு ஆண்டுகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு, அவர்களின் உண்மை சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளில் சேருபவர்கள் இரு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், ஒப்பந்தம் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். இந்த ஒப்பந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படாததால், மாணவர் சேர்க்கையின்போது சமர்ப்பித்த உண்மைச் சான்றுகளை திருப்பித் தரக் கோரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 2020-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பை முடித்த அருண்குமார், சுபோத் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், “படிப்பை முடித்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், தங்களது உண்மை சான்றிதழ்களை திரும்ப தரக்கோரி விண்ணப்பித்தோம்.ஆனால், ஒப்பந்தத்தை காரணம் காட்டி சான்றிதழ்களை வழங்கவில்லை” என குற்றம்சட்டியிருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், “படிப்பிற்கு பிறகு மருத்துவமனையில் பணி வழங்கினாலும், வழங்காவிட்டாலும், 2 ஆண்டுகள் முடிந்த பிறகு உண்மை சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. எனவே, சான்றிதழ்களை திரும்ப தர உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில், “படிப்பை முடித்த உடன் மருத்துவமனையில் பணி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற காரணத்திற்காக ஒப்பந்தத்தை மீற முடியாது” என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், “படிப்பை முடித்ததிலிருந்து 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என ஒப்பந்தம் போடப்படட்டுள்ளது. எனவே, அந்த கால அவகாசம் முடிந்த பின், சான்றிதழ்களை பெற மனுதாரர்களுக்கு உரிமையுண்டு. அதன்படி, அரசு தனது முடிவை மீண்டும் பரிசீலித்து, படிப்பை முடித்து 2 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால், அந்த மாணவர்களின் உண்மை சான்றிதழ்களை 2 வாரங்களில் வழங்க வேண்டும். இரு ஆண்டுகள் காலம் முடியாவிட்டால், மீதமுள்ள காலத்திற்கு அவர்களின் சேவையை அரசு பயன்படுத்தி கொள்ளலாம். ஒருவேளை அரசு மருத்துவமனையில் பணியாற்ற கடிதம் அனுப்பியும், பணியில் சேராதவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது” என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.