பெண் நீதிபதியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதை அடுத்து, பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது அரசு கவிழ்ப்பில், வெளி நாடுகளின் சதித்திட்டம் இருப்பதாகக் கூறினார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், காவல் துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், தனது அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாகவும், ஷாபாஸ் கில்லை இரண்டு நாள் காவலில் எடுக்க போலீசாருக்கு அனுமதி வழங்கிய நீதிபதி ஜெபா சவுத்ரி மீதும் நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டல் தொனியில் பேசினார்.
பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கு: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட இம்ரான் கான்
இதை அடுத்து இம்ரான் கான் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று இம்ரான் கான் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார். எனினும் அவரை மர்காலா காவல் நிலைய போலீசார் கைது செய்யுமாறு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.