எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் படம் நேற்று வெளியானது. படம் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறக்க தொடங்கின. பலர் குடும்பத்துடன் சென்று முதல் காட்சியை பார்த்து ரசித்து கொண்டாடிவருகின்றனர்.
மேலும், நாவலின் கருவை கலைக்காமல் மணிரத்னம் படமாக்கியிருப்பதாகவும், காட்சியமைப்புகளிலும் சரி, லொகேஷன் தேர்வுகளிலும் சரி மணி கலக்கியிருக்கிறார் எனவும் பலர் கூறிவருகின்றனர். குறிப்பாக, பொன்னியின் செல்வன் படம் இந்தியாவுக்கு கோலிவுட்டிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் சிறந்த படைப்பு எனவும் கொண்டாடிவருகின்றனர்.
அதேசமயம், பொன்னியின் செல்வன் படத்தை படித்தவர்களில் சிலருக்கு படம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இரண்டு பாகங்களில் பொன்னியின் செல்வனை சொல்லிவிட முடியாதுதான் என்றாலும் மணிரத்னம் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஆகமொத்தம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இருப்பினும் பொன்னியின் செல்வன் 70 ஆண்டுகளாக செய்யப்பட்ட முயற்சி என்பதால் தற்போது சாத்தியமாகியிருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை பார்க்க பலரும் ஆர்வத்துடன்தான் இருக்கிறார்கள்.
Thank you for giving #PS1 the biggest ever opening day for Tamil cinema worldwide!#PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsoffical @tipsmusicsouth pic.twitter.com/mhFEB66jF0
— Lyca Productions (@LycaProductions) October 1, 2022
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி படமானது முதல் நாள் 80 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. முதல் நாளே 80 கோடி ரூபாயை வசூலித்திருப்பதன் மூலம் பொன்னியின் செல்வனுக்கு மக்களிடம் இருந்த எதிர்பார்ப்பு எப்படி இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம் என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.அதுமட்டுமின்றி மேல்கொண்டு மக்கள் படத்தை பார்க்க செல்வார்கள் என்பதால் பொன்னியின் செல்வன் வசூலில் சாதனை படைக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.