புதுடில்லி :முப்படைகளின் தலைமை தளபதியாக ஜெனரல் அனில் சவுஹான், 61, நேற்று பதவி யேற்றார். எதிர்காலத்தில் ஏற்படும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் முப்படைகளை தயார் செய்வதே, தன் நோக்கமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.நம் நாட்டில் ராணுவம், கடற்படை, விமானம் உள்ளிட்ட முப்படைகளுக்கும் தலைமை வகிக்கும் உயரிய பொறுப்பான முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி 2020ல் உருவாக்கப்பட்டது. முதல் தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் பொறுப்பேற்றார்.
அணிவகுப்பு மரியாதை
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் 2021 டிசம்பரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, புதிய தளபதியை நியமிப்பது குறித்து மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, முப்படைகளின் தலைமை தளபதியாக நேற்று அவர் பதவியேற்றார். பதவியேற்பதற்கு முன், புதுடில்லியில் உள்ள போர் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது அவரது தந்தை சுரேந்திர சிங் சவுஹானும் உடன் இருந்தார்.இதன்பின் சவுத் பிளாக்கில் உள்ள ரைசினா ஹில்ஸ் பகுதிக்குச் சென்ற அவர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அப்போது ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, கடற்படை துணை தளபதி எஸ்.என்.கோர்மேட் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்து வேறுபாடு
பதவியேற்புக்கு பின் ஜெனரல் அனில் சவுஹான் கூறியதாவது:வரலாற்றுப் பெருமை மிக்க இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவியேற்றதில் பெருமை அடைகிறேன். முப்படைகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கடமையாற்ற முயற்சிப்பேன். அனைத்து விதமான சவால்களையும் ஒருங்கிணைந்து முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்காலத்தில் ஏற்படும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் முப்படைகளை தயார் செய்வதே என் நோக்கமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.அனில் சவுஹான் ராணுவத்தின் கூர்கா ரைபிள்ஸ் படைப்பிரிவில் 1981ல் பணியில் சேர்ந்தார். ஜம்மு – காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் வடக்கு படைப்பிரிவில் மேஜர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார். வடகிழக்கு படைப்பிரிவில் லெப்டினன்ட் ஜெனரலாகவும், கிழக்கு படைப்பிரிவில் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் – இன் – சீப் ஆகவும் பணியாற்றி உள்ளார்.
இவர், 2021, மே மாதம் பணி ஓய்வு பெற்றார். சிறப்பான ராணுவப் பணிக்காக பரம் வசிஷ்ட் சேவா, உத்தம் யுத் சேவா உட்பட பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். பணி ஓய்வு பெற்ற பின்னும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வந்தார். எல்லை பிரச்னையில் சீனாவுக்கும், நமக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ள நிலையில், சீன விவகாரங்களில் அனுபவம் பெற்ற அனில் சவுஹான் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement