மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்-1′ படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் முழு தீவிரமாக நடைபெற்று கடைசியாக சென்னையில் முடிந்தது. பொன்னியின் செல்வன் நாவலை படித்து அதற்கு அடிமையான ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை திரையில் காண ஆவலுடன் இருந்தனர். ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயராம், அஷ்வின், பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, கிஷோர் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே பெரிய அளவில் வசூலை குவித்துள்ளது.
இப்படத்தில் நடிப்பவர்களும் தங்களது ட்விட்டர் கணக்கின் பெயரை அவர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களோ அந்த பெயரை மாற்றுவது, அடிக்கடி ஒவ்வொருவரும் அவர்களின் கதாபாத்திர பெயரை வைத்தே ட்வீட் செய்வது என ஜாலியாக செய்து வந்தனர். படம் வெளியாவதற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விக்ரம் ராஜ ராஜ சோழனின் பெருமையையும், தஞ்சை கோவிலை பற்றி பெருமையாக பேசிய வீடியோக்களையும் பார்த்து ரசிகர்கள் வைப் செய்து வந்தனர். அடுத்ததாக தான் நடித்த இரண்டு படங்களிலும் ஐஸ்வர்யா ராய் தனக்கு இறுதிவரை கிடைக்கவில்லை என்று நகைச்சுவையாக பேசிய வீடியோக்களும் வைரலான நிலையில் விக்ரம் ரசிகர் ஒருவரின் ட்வீட்டுக்கு அளித்துள்ள பதிலை கண்டு ரசிகர்கள் விக்ரமை புகழ்ந்து வருகின்றனர்.
Thank you Hari for that lil note of love & concern.. a lot of sons & daughters will be bringing their proud moms & dads to watch their glorious history on the big screen.. my mother will be coming too.
— Aditha Karikalan (@chiyaan) September 28, 2022
பொன்னியின் செல்வன் நாவலுக்கு இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பல வருடங்களாக திரையரங்குகளுக்கு சென்று படம் எதுவும் பார்க்காத வயதானவர்கள் கண்டிப்பாக பொன்னியின் செல்வன்-1 படத்தை நேரில் பார்க்க வரக்கூடும், அதனால் திரையரங்கில் அவர்களுக்கான வசதிகளை முறையாக செய்து தர வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். இவரது டீவீட்டிற்கு பதிலளித்த விக்ரம், ‘உங்களின் அன்பும் அக்கறையும் கலந்த உங்கள் கருத்துக்கு நன்றி, நிறைய பிள்ளைகள் நமது பெருமைமிக்க வரலாற்றை திரையில் காண்பிக்க அவர்களது பெற்றோர்களை அழைத்து வருவார்கள், நானும் என் அம்மாவை அழைத்து செல்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார். மேலும் செய்தியாளர் சந்திப்பிலும் திரையரங்கிற்கு வரும் வயதானவர்களுக்கு முடிந்த உதவியை திரையரங்கு உரிமையாளர்கள் செய்து தர வேண்டும் என்றும் கூறி இருந்தார்.