ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்று இரவு நடப்பதால் பக்தர்கள் அங்கு குவிந்து வருகிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும், காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பிரமோற்சவத்தின் 5ம் நாள் விழாவில் நாச்சியார் திருக்கோலத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். மற்றொரு பல்லக்கில் நாச்சியாருடன் கிருஷ்ணரும், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் இருபுறமும் திரண்டு கோவிந்தா முழக்கங்களை எழுப்பி வழிபட்டனர்.
மயிலாட்டம், ஒயிலாக்கம், பொய் கால் குதிரை ஆட்டம், கோலாட்டம் ஆடியபடி பக்தர்கள் வீதி உலாவில் பங்கேற்றனர். பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. கருட சேவையை காண பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகிறார்கள். கருட சேவையை காண 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். 2,300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.