நாட்டில் மகாராஷ்டிராவில்தான் அதிகப்படியான வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் விளையும் வெங்காயம் நாடு முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு மாதத்தில் வெங்காயத்திற்கு போதிய விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்று கோரி வெங்காயம் அதிகமாக விளையும் நாசிக் மாவட்டத்தின் பல பகுதியில் விவசாயிகள் பல முறை போராட்டம் நடத்தியுள்ளனர்.
தற்போது மீண்டும் மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கூடி சாலையில் வெங்காய வாகனங்களை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகாவ் அருகில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இன்று காலையில் நடந்த இப்போராட்டத்தால் மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மகாராஷ்டிரா வெங்காய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குபேர் ஜாதவ் கூறுகையில், கடந்த சில மாதத்தில் வெங்காயத்தின் சராசரி விலை மிகவும் குறைந்துவிட்டது.
இதனால் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது விற்பனையாகும் விலையில் விவசாயிகளால் வெங்காயத்தை விளைவிக்க ஆகும் செலவைக்கூட எடுக்க முடிவதில்லை. அரசு இவ்விவகாரத்தில் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். வெங்காயத்திற்கு மத்திய அரசு குவிண்டாலுக்கு 3 ஆயிரம் ரூபாயை குறைந்த பட்ச கொள்முதல் விலையாக நிர்ணயிக்கவேண்டும்.
இதன் மூலம் விவசாயிகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். கடந்த நான்கு மாதங்களாக வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வரும் விவசாயிகளுக்கு அரசு மானியம் கொடுக்கவேண்டும். விவசாயிகளுக்கு உதவ அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். விவசாயிகள் கோடையில் அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் அறுவடை செய்யும் வெங்காயம் அதிக விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 6 மாதங்கள் வரை சேமித்து வைத்திருப்பர். அந்த வெங்காயத்தை 6 மாதங்கள் மட்டுமே சேமித்து வைக்க முடியும். எனவே கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது மார்க்கெட்டிற்கு வர ஆரம்பித்துள்ளது. ஆனால் அதற்கு போதிய விலை கிடைக்கவில்லை என்பதால் விவசாயிகள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.