டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டை சேர்ந்த கே.என்.திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப்பெற அக்டோபர் 8ம் தேதி கடைசி நாள் ஆகும். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கார்கே ராஜினாமா செய்துள்ளார்.
இதன் காரணமாக மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ப.சிதம்பரம் அல்லது திக்விஜய் சிங் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தினர் அல்லாத தலைவர் ஒருவர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு:
மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேசிய தலைவராகும் 2வது நபராக இருப்பார். அத்துடன் ஜெகஜீவன்ராம், சீதாராம் கேசரி வரிசையில் பட்டியல் பிரிவை சேர்ந்த 3வது தலைவராகவும் இருப்பார். 1972 முதல் 2008ம் ஆண்டு வரை கர்நாடகத்தில் நடந்த 9 சட்டசபை தேர்தல்களில் தொடர்ச்சியாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர். அதன்பிறகு 2009ல் எம்.பி.யாக வென்று தொடர்ந்து 10 தேர்தல்களில் வென்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் ரயில்வேத்துறை அமைச்சராக செயல்பட்டவர். 2019ல் மக்களவை தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். அதன்பிறகு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டவர். நாடாளுமன்ற விவாதங்களில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் கருத்துக்களுக்கு மிகவும் காத்திரமான முறையில் பதிலளிக்கும் காங்கிரஸ் தலைவர்களில் கார்கேவும் ஒருவராவார்.