12 பேரை கடித்துக் குதறிய பிட்புல் நாயை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தற்காப்புக்காக அடித்துக்கொன்ற சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த ஒருவர் பிட்புல் ரக நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து தப்பிய அந்த நாய் 5 கிராமங்களில் அலைந்துதிரிந்து 12 பேரை கடித்துக் குதறியது. டாங்கோ ஷா கிராமத்தில் இருந்து சுஹான் கிராமம் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தை சுற்றிவந்த நாய், வழியில் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் ஆக்ரோஷமாக கடித்துக் குதறியது. பலருக்கு தையல் போடுமளவுக்கு காயம்பட்டிருக்கிறது. சில கால்நடைகளையும் கடித்துக் கொன்றுள்ளது அந்த பிட்புல் நாய்.
இறுதியாக சுஹான் என்ற கிராமத்துக்குள் நுழைந்த அந்த நாய் அங்கே வயல்வெளியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த கேப்டன் சக்தி சிங் என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரரை கடிதத்தில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சக்தி சிங் தற்காப்புக்காக அந்த நாயை அடித்துக் கொன்றார். அதன்பின்னரே கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
முன்னதாக, பஞ்ச்குலா முனிசிபல் கார்ப்பரேஷன் (சண்டிகர் அருகே) நகர எல்லைகளுக்குள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் ‘ஃபெரோசியஸ்’ பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பிட்புல் நாய்கள் வெளி ஆட்களை மட்டுமல்லாமல் சில சமயங்களில் அதன் எஜமானர்களை தாக்கக்கூடியவை.
இதுபோன்ற பல சம்பவங்களும், உயிரிழப்புகளும் நிகழ்ந்ததால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பிட்புல் நாயை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்தபோதிலும், தடை ஏதும் விதிக்கப்படாததால் பலர் பிட்புல் நாயின் ஆபத்தை உணராமல் வளர்த்து வருகின்றனர்.
இதையும் படிக்க: பிட்புல் நாய்கள் ஏன் ஆபத்தானவை? நிபுணர்களின் பகீர் எச்சரிக்கைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM