புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வு தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு மொத்தம் நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வில் தான் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா மாதிரியான தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்க உள்ளன.
இந்த நிலையில், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “வரும் 6 மாத காலத்தில் நாட்டின் 200 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் 80-90 சதவீத பகுதிகளில் 5ஜி பயன்பாட்டுக்கு வரும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி சேவையை நாட்டில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அறிமுகம் செய்ய உள்ளது. அது மலிவான விலையில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடிய விரைவில் 5ஜி திட்டங்களின் விலையை டெலிகாம் நிறுவனங்கள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முதற்கட்டமாக நாட்டில் சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.