இந்தியாவில் 5ஜி தொலைத் தொடர்பு சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 5 ஜி தொலைத் தொடர்பு சேவையை முறைப்படி தொடங்கி வைத்தார்.
இதில், நாட்டின் மூன்று பெரிய தொலை தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகியவை 5 ஜி இணையத்தின் முன்மாதிரியை காட்சிப்படுத்தியிருந்தன. இவற்றைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, 5 ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களையும் ஆய்வு செய்தார். அதில், 5 ஜி அடிப்படையிலான டிரோன்கள், இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை செயல்பாட்டிற்கு வர உள்ளது.
வேலைகளை எளிதாக்குவது முதல் அனைத்து விதமான சேவைகளையும் விரைவாகப் பெற உதவும் 5ஜி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
உலகம் முழுவதும் கடந்த இருபது ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கிறது. 2023க்குள் இந்தியாவின் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 83.5 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறும் நிலையில், 5ஜி தொழில்நுட்பத்திற்கான தேவையை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
ஐந்தாம் தலைமுறைக்கான அலைவரிசையை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி. இது முந்தைய 4ஜி எனும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தைவிட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும்.
அதாவது 3ஜி, 4ஜி கால்வாய் நீர் போன்றது என்றால், 5ஜி அதிகமாக வெள்ளம் ஓடும் ஆறுபோல இருக்கும். உலகிலேயே அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4ஜி எல்டிஇ பயன்பாட்டாளர்களுக்கு 47.5 எம்.பி.பி. எஸ். வேகம் கிடைப்பதாகவும், இந்தியாவை பொறுத்தவரை 11.5 எம்.பி.பி.எஸ். வேகம் இருப்பதாகவும், சர்வதேச இணைய வேக ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. 5ஜி தொழில்நுட்பத்தில் அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7 ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகமும், 3 ஜிபிபிஎஸ் பதிவேற்ற வேகமும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
5ஜி தொழில்நுட்பத்தில் பெரிய கோப்புகளை ஒரு நொடியில் பதிவிறக்க முடியும். எந்தவொரு திரைப்படத்தையும் ஒரு சில நொடிகளில் அதிவேகத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். போக்குவரத்து, விவசாயம், சுகாதாரம், கல்வி உட்கட்டமைப்பு, தளவாடம் ஆகியவற்றில் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமன்றி மெய்நிகர், ஆகுமெண்ட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை அதிகரிக்கும்.
5ஜி, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவுகள், பகுப்பாய்வு போன்றவற்றில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM