சேலம், ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவுக்கு தலைமை தாங்க ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் புஸ்பராணி மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது . இலவச சைக்கிளுக்காக 43 மாணவ-மாணவிகள் காத்திருந்தனர்.
இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக இரு தரப்பினரும் விழாவிற்கு வந்ததால் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது, யார் சைக்கிள் வழங்குவது என வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மேடையில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினர் பெயரை குறிப்பிடும் முன், மாவட்ட கவுன்சிலர் பெயரை கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சைக்கிள் நிகழ்ச்சி தாமதமாக, மாணவ-மாணவிகள் வெகு நேரம் வெயிலில் காத்திருந்தனர். இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தரப்பினர், `எம்.எல்.ஏ-வை அவமானப்படுத்தும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக’ கூறி பள்ளி தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.எல்.ஏ-வின் ஆதரவாளரான மாயவன் என்பவர் தலைமையாசிரியரிடம், `5 லட்சம் ஓட்டு வாங்கி எம்.எல்.ஏவானவங்க பெருசா, வெறும் 5 ஆயிரம் ஓட்டு வாங்குனவங்க பெருசா?’ என்று பேசியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது.
அதன் பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி குழந்தைகளை வெகு நேரம் காக்க வைக்க வேண்டாம் என்று கூறி உடனடியாக அங்கு காத்திருந்த மாணவர்களை அழைத்து சைக்கிளை கொடுத்து விட்டு அங்கிருந்து கலந்து போக செய்தார்.
இதுகுறித்து ஏற்காடு அதிமுக எம்.எல்.ஏ., சித்ராவிடம் பேசியபோது, “சைக்கிள் வழங்கும் விழாவுக்கு உரிய நேரத்தில் வராமல் காலம் தாழ்த்தியது தி.மு.க-வினர் தான். அதுவும், வந்தவுடனே ஏன், அதிமுகவினரை இந்நிகழ்ச்சிக்கு கூப்பிட்டிங்கனு தலைமையாசிரியரிடம் சண்டைக்கு போறாங்க. அதுமட்டுமல்லாம சைக்கிள் நாங்க தான் கொடுப்போம்னு சர்ச்சைக்கராமாக பேசினர்”என்றார்.
மேலும் தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராஜாவிடம் பேசியபோது, “பள்ளி நிகழ்ச்சியானது 3 மணிக்கு ஆரம்பிப்பதாக கூறிதான் தலைமையாசிரியர் எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இவர்கள் முன்னதாக வந்துவிட்டு பிரச்னை செய்யும் நோக்கில் பேசினர். மாணவர்கள் நீண்ட நேரமாக வெயிலில் நின்றதாக கூறப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது” என்றார்.
மேலும் இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் மாலதி பேசியபோது, “பள்ளி நிகழ்ச்சிக்கு இருதரப்பினரையும் அழைத்ததே மற்ற பள்ளிகளுக்கு முன்உதாரணமாக இருகட்சியினரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க வந்துள்ளனர் என்ற நல்ல எண்ணத்தில் தான். ஆனால் சிலர் தேவையில்லாமல் பேசி இந்நிகழ்ச்சியை திசைதிருப்பிவிட்டனர். மாணவர்களுக்கு தேர்வு நடந்து வருவதால் மதியவேளையில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வைத்துக்கொள்ளலாம் என்றுதான் சிறப்பு விருந்தினர்களை 3 மணியளவில் வருமாறு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் முன்னதாகவே எம்.எல்.ஏ வந்துவிட்டார். அதன்பின் வந்த தி.மு.கவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வந்தனர். இதற்கிடையில் அவர்களுக்குள் யார் இவங்களெல்லாம் கூப்பிட்டது என்று வார்த்தைகள் விட பிரச்னையாக மாறியது” என்றார்.