HBD Sivaji: நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிடித்த நடிகர்கள் யார், யார் தெரியுமா? – சுவாரஸ்ய தகவல்கள்

சிவாஜிதான் இந்திய சினிமாவின் திறந்த வெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்க, அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்களாக இருப்பார்கள். இன்று அவரின் பிறந்தநாள். அவரைப் பற்றிய சில பர்சனல் பக்கங்கள்.

* நாடகத்தில் சிவாஜி முதன் முதலில் போட்ட வேடம் பெண் வேடம்தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனை வெட்கத்தோடு பார்க்கும் சீதையின் வேடம்தான் அவருக்கு முதலில் கிடைத்தது. அதை அற்புதமாகச் செய்து அத்தனை பேரின் கவனத்திற்கும் உள்ளானார்.

Sivaji Ganesan | சிவாஜி கணேசன்

* அதுவரைக்கும் வி.சி.கணேசன் என்ற பெயரில்தான் இருந்தார். சத்ரபதி சிவாஜி படத்தில் நடித்ததைப் பார்த்தார் பெரியார். ’நீ இன்று முதல் சிவாஜி கணேசன்’ என அன்போடு கட்டியணைத்துச் சொன்னார் ஈ.வெ.ரா. அன்று முதல் வி.சி.கணேசன் சிவாஜி கணேசன் ஆனார்.

* வ.உ.சி-யாக சிவாஜி நடித்ததைப் பார்த்துவிட்டு வ.உ.சி-யின் மகன் எங்க அப்பாவைப் பார்த்ததுபோல் இருக்கிறது என்று சிவாஜியிடம் சொன்னார். அதையே கடைசி வரை தன் வாழ்நாளுக்கான பாராட்டாக நினைத்தார் சிவாஜி.

* 1952-ல் பராசக்தி படத்தில் சிவாஜி அறிமுகமானபோது ஒல்லியாக இருக்கிறார், கதாநாயகனுக்கான அழகில்லை என்றெல்லாம் சொல்லி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். தயாரிப்பாளர் பெருமாள் உறுதியாக, பிடிவாதமாக நின்றதால் மட்டுமே சிவாஜி பராசக்தியில் நடிக்க முடிந்தது. அவர் நடிக்காவிட்டால் கே.ஆர்.ராமசாமியை அந்த வேடத்தில் நினைத்து வைத்திருந்தார்கள்.

பராசக்தி சிவாஜி

* சிவாஜிக்கு நடிப்பைச் சொல்லிக்காட்டும் டைரக்டர் பி.ஆர்.பந்துலுவின் நடிப்பு பிடிக்கும். நர்கிஸ் நடிப்பும் அவருக்கு இஷ்டமானது. ஹாலிவுட்டில் சார்லஸ் போயர் நடிப்பை அதிகமும் விரும்புவார். பிற்காலத்தில் கமல்ஹாசன் நடிப்பைப் புகழ்ந்து அடிக்கடி பேசினார்.

* கிட்டத்தட்ட 301 படங்களில் நடித்திருக்கிறார். ஒரு நாள்கூட படப்பிடிப்புக்குத் தாமதமாகச் சென்றதில்லை. வீட்டில் இருந்தே மேக்கப் போட்டுக்கொண்டு சரியான நேரத்திற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே ஷூட்டிங் ஸ்பாட்டை வந்தடைவார். அந்தக் காலம் தவறாமையை இப்போதுவரை மற்ற நடிகர்கள் தொட முடியவில்லை என்பது உண்மை.

* எது எப்படி இருந்தாலும், எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பொங்கலுக்கு தன் சொந்த ஊரான சூரக்கோட்டைக்கு மொத்தக் குடும்பத்தோடு சென்றுவிடுவார். இதில் தம்பிகளின் குடும்பங்களும் சேர்த்தி. அங்கே இருக்கிற ஒரு வாரமும் கிராம மக்களோடு சேர்ந்து கிராமத்து மனிதன் மாதிரியே மாறிவிடுவார். அது வேற சிவாஜி.

* லதா மங்கேஷ்கர்தான் அவருக்கு இஷ்டமான பாடகி. அவரை நிஜத் தங்கையாகவே நினைத்துக் கொண்டாடினார் சிவாஜி. இதை லதாவும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். தீபாவளி, பொங்கலுக்கு சீர் அனுப்பியதும் நடந்தது. சிவாஜி மரணம் அடைந்த போது மும்பையிலிருந்து அடுத்த பிளைட்டை பிடித்து உடனே வந்தார் லதா. கண்ணீர் வடித்தபடி அவரது உடல்மீது மலர் வைத்து அஞ்சலி செலுத்தி, பக்கத்திலேயே இருந்தார். இதை பூர்வ ஜென்ம பந்தம் என அப்போது பேசிக்கொண்டார்கள்.

கலைஞர் கருணாநிதியும் சிவாஜியும்

* கிரிக்கெட்டின் மீது அலாதி பிரியமுண்டு. அதன் அத்தனை நுணுக்கங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். கிரிக்கெட் போட்டியை நேரில் பார்ப்பதற்கும் ஆர்வமாக இருப்பார். அதே போல கேரம் விளையாட்டிலும் அவர் படுகெட்டி.

* சிவாஜியைத்தான் தமிழில் எல்லோரும் சிறந்த நடிகர் என்பார்கள். ஆனால் தமிழில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களாக டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதாவைக் குறிப்பிடுவார் சிவாஜி. இறுதிக்காலத்தில்தான் கமலின் நடிப்பைக் கொண்டாடினார்.

* கலைஞரை ‘மூனா கானா’ என்றும் கமல்ஹாசனைக் ’கமலா’ என்றும், எம்.ஜிஆரை ‘அண்ணன்’ என்றும், ஜெயலலிதாவை ‘அம்மு’ என்றும்தான் கடைசிவரை கூப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.