திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது. அதன்படி தொற்று பரவல் குறைந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது, அதன் பேரில் பக்தர்களும் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதையடுத்து, 9 மணி நேரத்துக்கு முன்பாகவே, திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் 11¼ மணிநேரம் (காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை) மூடப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது, வரும் அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுவதால், பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, என அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் அன்றைய தினம் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர்.
இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் நேரம்:
தீபாவளி மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 04.23 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கும். மேலும் 06.25 வரை இந்த சூரிய கிரகணம் நீடிக்கும். இந்த சூரிய கிரகணம் ஐரோப்பா, தெற்கு/மேற்கு ஆசியா, வடக்கு/கிழக்கு ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் பகுதிகளில் தெரியும். இந்த கிரகணத்தின்போது சூரியனின் 65 சதவீத பகுதியை நிலவு மறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணம் சுவாதி நட்சத்திரத்தில் துலாம் ராசியில் நிகழும் என்பதால். எனவே துலாம் ராசிக்காரர்களையே இது முக்கியமாக பாதிக்கும் என கூறப்படுகிறது. சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.