அசுரன் – ஐடியா கொடுத்த திருமாவளவன்; ஏற்க மறுத்த வெற்றிமாறன்?

எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற கதையை தழுவி அசுரன் படம் உருவானது. வெற்றிமாறன் இயக்க தனுஷ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்து 2019ஆம் ஆண்டு படம் வெளியாக மாபெரும் வெற்றிபெற்றது. வெற்றியோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியது. கதையாக மட்டுமின்றி தனுஷின் நடிப்பும் பரவலாக பேசப்பட்டது. இந்தச் சூழலில் அசுரன் படம் ஆரம்பிக்கும்போது திருமாவளவனை சந்தித்தது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருப்பது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 60வது பிறந்தநாளை அவரது கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடிவருகின்றனர். அதனையொட்டி சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ”திருமாவளவனை நான் 2,3 சந்தர்ப்பங்களில் சந்தித்ள்ளேன். முதலில் அவரை பற்றி சொல்ல் வேண்டுமென்றால் அவர் மிக எளிமையான மனிதர்.

ஒரு அரசியல் இயக்கத்தை நடத்திவரும் நபர் இவ்வளவு சிம்பிளா ஒருத்தர் இருக்க முடியுமா என எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். நான்  அசுரன் படம் எடுக்கப்போகும் முன் அது அரசியல் ரீதியாக தப்பாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அவரிடம் நேரம் வாங்கிக்கொண்டு நேரில் போய் சந்தித்தேன். அப்போது அவரிடம் இதுபோன்ற ஒரு நிகழ்வை எடுக்கும்போது எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கேட்டேன். 

 

அதற்கு தனிமனிதர்களால் சமூகத்திற்கு ஒரு தீர்வு வரும் என்று சினிமாவுல சொல்லாதீர்கள்.தொடர்ந்து அதே தவறைத்தான் அனைவரும் செய்கிறீர்கள் என குற்றஞ்சாட்டினார். மேலும் ஒரு அமைப்பாய் உங்கள் கதைக்குள்ள திரளுங்கள் என சொல்லிவிட்டு சில ஐடியாக்களை வழங்கினார். ஆனால் படம் எடுத்து முடித்த பின் பார்த்த அவர் அதே குற்றச்சாட்டுக்களைத்தான் முன்வைத்தார். ஆனால் சினிமாவில் சில விஷயங்களை தவிர்க்க முடியாது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.