அதிமுக என்றால் அமித் ஷா திமுகவா? – சுப.வீரபாண்டியன் கேள்வி!

நெல்லை வண்ணார்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் திராவிட நட்பு கழகம் அறிமுக கூட்டம் பேரவை துணைச் செயலாளர் சிங்கராயர் தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பேசியது:

பேருந்தில் பாட்டி ஒருவர் ஓசியில் பயணிக்கமாட்டேன் என்று கூறி வைரலான உபகாரத்தில் தற்போது உண்மை வெளிப்பட்டுள்ளது அந்தப் பாட்டியின் பெயர் துளசி அம்மா. அவரை அதிமுககாரர்கள் பணம் கொடுத்து அவ்வாறு பேச செய்துள்ளனர் இதுதொடர்பாக மூன்று பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாரெல்லாம் பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்று கருதுகிறார்களோ அவர்களெல்லாம் கைகோர்க்கும் நேரம் இது. இந்த சூழ்நிலையில் நாம் நல்ல முடிவெடுக்க வில்லை என்றால் அழிந்து விடுவோம். பாஜகவின் நோக்கம் முதலில் இஸ்லாமியர்களை அழிப்பது, பின்பு கிறிஸ்தவர்களை அழிப்பது, கேரளாவில் கம்யூனிசத்தை அழிப்பது, தமிழகத்தில் திராவிடத்தை அழிப்பது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை.

எனவே தான் தற்போது அவர்கள் ‘ஒரே நாடு ஒரே மொழி’ என பசப்பு வார்த்தை பேசுகிறார்கள். ஆனால் அது அவர்கள் நோக்கம் அல்ல. ‘ ஒரே நாடு ஒரே கட்சி’ என்பதுதான் அவர்களின் உண்மையான நோக்கம்.

‘மாநில சுயாட்சிதான் இந்தியாவின் எதிர்காலம்’ என தலைவர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மிக அழுத்தமாக கூறியுள்ளார், மாநில சுயாட்சி கருத்து இந்தியா முழுவதும் பரவுமானால் நாட்டில் இருந்து பாஜக விரட்டி அடிக்கப்படுcd. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என எச்சரிக்கிறேன். மதத்திற்கு எதிராக இருங்கள் என்று நாங்கள் கூறவில்லை. அந்த மதத்தோடு கரைந்து போகாதீர்கள் என்று தான் வலியுறுத்தி வருகிறோம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட ஒரு சில நேரங்களில் ஒன்றிய அரசை எதிர்த்து பேசியுள்ளார். ஆனால் அதிமுக என்றால் அமித் ஷா திமுகவா? என்று கேட்கும்படியாக அக்கட்சியின் நிலைமை உள்ளது. தயவுசெய்து அது அம்மா திமுகவாக ஆவது இருந்துவிட்டு போகட்டும். எடப்பாடியும், பன்னீர்செல்வமும் நீதிமன்றம் செல்வது தவிர வேறு எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலைக்கு அவர்களை ஆளாக்கியவர்கள் யார் என்பதை கூட புரியாமல் உள்ளார்கள். அவர்களும் முடிந்தால் திராவிட நட்பு கழகத்தில் வந்து சேரலாம்.

மீண்டும் கூறுகிறேன்; இனத்தால் நாம் திராவிடர்கள் என்று சொல்லவில்லை, சித்தாந்தத்தால் கருத்தியலால் திராவிடனாக இருங்கள் என்று தலைவர் மு க ஸ்டாலின் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். திராவிடம் என்றால் சமூகநீதி, சமத்துவம், பெண் விடுதலை. திராவிடனாய் -நண்பர்களாய் இணைவோம், இதை நாடு முழுவதும் எடுத்துச் செல்வோம்; இயக்கமாக்குவோம். பிறகு இந்த மண்ணில் ஒருபோதும் காவி கால்பதிக்க முடியாது என்று சுப.வீரபாண்டியன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.